தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்தியாவில் அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.