தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் கரூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என தகவல் அளித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு கரையோரங்களில் மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கர்நாடக, கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.