இந்தியாவில் வாகன பதிவு கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக புதிய வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவுக் கட்டணங்களை கடுமையாக உயர்த்த உள்ளதாகவும், இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.600-ல் இருந்து ரூ.5000 ஆகவும், வாகனங்களை புதுப்பிக்க கட்டணம் ரூ.2000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. இருசக்கர வாகனங்களை பொறுத்த வரை தற்போது இருக்கும் ரூ.50-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.
டிரக், பஸ்,லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.2000 இருந்து ரூ.40,000 வரை உயர்த்த உள்ளதாகவும், இதற்கான சட்ட வரைவையும் முன் மொழிந்துள்ளது. இந்த புதிய கட்டண அமைப்பு அடுத்த 45 நாட்களுக்குள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், இது பற்றியான கருத்துக்களை அனைத்து தரப்பினரிடமும் கேட்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாகங்களின் மறுப்பதிவுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் எரிபொருள் வாகனப் பயன்பாடு குறைந்து மின் வாகனப் பயன்பாடு அதிகரிக்கும் என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.