ரயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது.
அதன்பின் ரயில்வே காவல்துறையினர் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்த போது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை பிரித்து பார்த்ததில் 2 பொட்டலங்களில் 5 கிலோ கஞ்சா இருந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.