ரயில் மோதியதால் 6 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் சென்றுள்ளது. அப்போது காரைக்குடி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதனை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர் தொடர்ந்து அலாரம் அடித்துக்கொண்டு ரயிலின் வேகத்தை குறைத்துள்ளார். ஆனால் மாடுகள் அலாரம் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்து நகராமல் இருந்தது. இதனால் ரயில் தண்டவாளத்தில் நின்ற மாடுகள் மீது மோதியுள்ளது. இதனையடுத்து தண்டவாளத்தில் நின்ற ஆறு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் என்ஜின் டிரைவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் பலியான மாடுகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றியுள்ளனர். மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகளை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்த மாடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.