உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த காரணத்தால் ராஜ் பப்பர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்..
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 350 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம்முள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 64 இடத்தை வென்றது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் ஆகிய கூட்டணி கட்சிகள் 15 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கட்சி மீதமுள்ள ஒரு தொகுதியான சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே வென்றது.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த தொகுதியில் ஸ்மிரிதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வி கண்டார். இந்த தோல்வியால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், படுதோல்விக்கு பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் ராஜ்பப்பர் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனது ராஜினாமா கடிதத்தையும் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ளார்.
இதற்க்கு முன்னதாக, தேர்தல் முடிவுகள் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும். என்னுடைய பொறுப்பை நான் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனவும், குற்ற உணர்ச்சி தனக்கு இருப்பதாகவும் ராஜ்பப்பர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.