சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி ராஜகோபால் உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜராகினார். அப்போதே அவரின் உடல் நிலை மோசமாக இருந்தததால் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் அப்போது அவரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்டான்லி அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாத காரணத்தால் ராஜகோபாலின் மகன் வேறு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ராஜகோபாலை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதன்படி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.