ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் கெலாட்டுக்கு ஆதரவு தந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஒரு மாதமாக ஜெய்சல்மரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்காகாந்தி ஆகியோரை சச்சின் பைலட் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்த சமரச முயற்சியினால் திரு. சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூர் திரும்பினார். ராஜஸ்தானில் நிலவிய அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்ததாக கருதப்படும் நிலையில், ஜெய்சல்மரில் தங்க வைக்கப்பட்டிருந்த திரு. அசோக் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் இன்று ஜெய்ப்பூர் திரும்பினார். இதற்கிடையே ராஜஸ்தான் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூட விருக்கும் நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.