மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்..
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 47 (32) ரன்களும், குவிண்டன் டிகாக் 81 (52) ரன்களும் குவித்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியாக விளையாடி 28* (11) ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், ரஹானேவும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். பவர் பிளே முடிந்ததும் ரஹானே 37 (21) ரன்களில் க்ருனால் பாண்டியா பந்து வீச்சில் சூர்ய குமார் வசம் பிடிபட்டார் . அதன் பின் சஞ்சு சாம்சன் களமிறங்கி ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். அதன் பின் பட்லர் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக அல்ஜாரி ஜோசப் வீசிய 13 வது ஓவரில் பட்லர் 6,4,4,4,4,6 என 28 ரன்கள் விளாசினார்.
அதன் பிறகு ராகுல் சாஹர் பந்து வீச்சில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களில் (7 சிக்ஸர், 8 பவுண்டரி) சூர்ய குமார் யாதவ் வசம் பிடிபட்டார். அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க, சஞ்சு சாம்சன் அவர் பங்குக்கு 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் த்ருப்பாதி 1, லிவிங்ஸ்டன் 1,ஸ்டீவ் ஸ்மித் 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அதன் பின் ஷ்ரேயஸ் கோபாலும், கிருஷ்ணப்பா கவுதமும் களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட ஷ்ரேயஸ் கோபால் பவுண்டரி அடித்தார். இறுதியில் 19.3 ஓவரில் 6 விக்கெட் இழந்து 188 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் கோபால் 13* ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 0* ரன்னிலும் ஆட்டமிழக்காமால் களத்தில் இருந்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.