ரேபிட் கருவி பரிசோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தியது. துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானிலும் இந்த கிட்கள் தவறான முடிவுகளை தெரிவிக்கிறது என்று மாநில அமைச்சர் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 168 பேரின் ரத்த மாதிரிகளை ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு சோதனை செய்துள்ளனர். இந்த முடிந்த நம்பகத்தன்மை வெறும் 5.4% மட்டுமே உள்ளது. 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் வெறும் 5 பேருக்கு மட்டுமே முடிவு சரியாக வந்துள்ளது. மீதம் 95 பேருக்கு தவறான தகவல் வந்துள்ளது. எனவே, இது தொடர்பான தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயப்படுத்தப்போவதில்லை என ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான். இந்த மாநிலத்தில், இன்று மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,659 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.