ஜெய்ப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த கைலாஷ் சந்த் போக்ராவை புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக காவல்துறை துணை கமிஷனராக கைலாஷ் சந்த் போக்ரா சிறப்பு விசாரணை பிரிவில் பணியாற்றி வருகின்றார். அதுதொடர்பாக இவரிடம் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு உள்பட மூன்று புகார்களை அளித்தபோது, இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கைலாஷ் கேட்டுள்ளார்.
ஆனால் அந்தப் பெண் தன்னிடம் இவ்வளவு தொகை இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து, அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி கைலாஷ் சந்த் போக்ரா அந்த பெண்ணை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஊழல் தடுப்பு பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக கைலாஷ் சந்த் போக்ராவை கைது செய்தனர். அதன்பின் ராஜஸ்தான் அரசு நேற்று கைலாஷ் சந்த் போக்ராவுக்கு கட்டாய ஓய்வினை வழங்கி உத்தரவிடப்பட்டது.