கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து “கைதி” என்ற படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகிய இந்த படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜிக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
அந்த வகையில் தளபதி விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கும் காரணமாக இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இதுதொடர்பான தற்போதைய நிலை குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில் “இப்போதைக்கு இந்த படம் பற்றி எந்த தகவலையும் நான் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனமே இப்படம் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு அவர்களே அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.