நடிகர் ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
வாய்க்கு வந்த கருத்துகளை ரஜினி பேசிவருவதாகவும், பெரியார் குறித்து அவதூறு பரப்பியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் வெளிப்படையாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த சூழலில் இன்று காலை சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ, தவறாகவோ எதுவும் நான் கூறவில்லை. நான் கேள்விப்பட்ட, 2017ஆம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன், வருத்தமும் தெரிவிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும், திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது இப்படி விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.