நான் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று ரஜினி ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொண்டனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன். அரசியலை பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடி எடுத்து வைக்க முயன்றார். கால சூழ்நிலை காரணமாக அவரது உடல்நிலை சரி இல்லாததால் அவரது கட்சி தொடங்குவது தவிர்க்கப்பட்டது.
ஆனாலும் நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை கலைக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள்பிடிக்கும் அநாகரீக அரசியலை அடியோடு வெறுக்கிறேன் என தெரிவித்திருந்தார். காந்திய மக்கள் இயக்கம் சந்தர்ப்பவாத செயலில் ஈடுபடாது என்று உறுதியளிக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். நாளை ரஜினி அரசியலுக்கு வந்தால் காந்திய மக்கள் இயக்கம் அவரோடு சேர்ந்து பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.