நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட கழகங்கள் கண்டனம் தெரிவித்தன.
ரஜினி ஆதாரம் இல்லாமல் பேசுகின்றார் என்று பல்வேறு குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தி, ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரஜினிகாந்த் நான் பேசியதில் இருந்து பின்வாங்க போவதில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என்று பேசிய கருத்தில் ரஜினி உறுதியாக இருந்தார். ரஜினிக்கு எதிராக பல்வேறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி, நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி அவதூறுகளை பரப்பி அவர் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளார் என்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 18ம் தேதி புகார் அளித்திருந்தார். ஒருமாதம் ஆகியும் ரஜினி மீதான புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் உமாபதி நீதிமன்றத்தை நாடினார்.
சென்னை எழும்பூரில் உள்ள 2ஆவது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரஜினி மீது கொடுத்த புகாரில் காவல்துறை 1 மாதம் ஆகியும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை பலகட்டங்களாக விசாரித்த நீதிமன்றம் ரஜினிமீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கின்றதா ? என்பது குறித்த அறிக்கையை காவல்துறையினரிடம் கேட்டிருந்தது.
காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை வருகின்ற 9ஆம் தேதி ( இன்று ) ஒத்தி வைத்து உததரவிட்டார். இன்று நீதிமன்றம் பிறப்பிக்க போகும் உத்தரவால் நடிகர் ரஜினி வழக்கு பதிவு செய்யபடுமா ? இல்லை வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா ? என்ற நிலை எழுந்துள்ளதால் ரஜினி ரசிகர்களை கவலையடையந்துள்ளனர்.