தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழக அரசோடு மக்களாகிய நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம் என கூறியுள்ள அவர், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 168பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த வைரஸால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , மேலும் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.