நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் பிரதமரான ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான நிலையில் அவரது முப்பதாவது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாபின் லூதியானா நகரில் அவரது சிலைக்கு இந்து அமைப்பினர் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில் அந்த அமைப்பின் பஞ்சாப் தலைவர் வருன் மேத்தா, சிவம் பர்மா மற்றும் ரோகித் சர்மா போன்றோர் பங்கேற்றனர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேத்தா 40 வயதில் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி இந்திய அரசியலில் இளைஞர்களின் பங்கை உறுதி செய்வதற்காக 18 வயது இளைஞர்களுக்கு ஓட்டு போடும் உரிமையை வாங்கி கொடுத்தார். நாட்டில் கணினி புரட்சி அவராலே ஏற்பட்டது. பயங்கரவாதத்தை உலக அரங்கில் எதிர்த்தவர். பிரதமராக உயிரிழந்த ராஜீவ் காந்திக்கு பால் அபிஷேகம் செய்து, மலர்களால் அஞ்சலி செலுத்தி கவுரவிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று அவர் கூறினார்.