21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உலகளவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 1144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகிறார்கள். இவர்கள் மூலம் கொரோனா பரவும் அச்சம் அதிகரித்து இருப்பதால் ஊரடங்கு உத்தரவு திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிந்திவிடாது.
அதற்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்ற தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.