பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது மனித குலத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களும் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் தான் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இந்தியா இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராக போராட தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் உறுப்பு நாடுகள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வுடன் தங்கள் இடையேயான உறவை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் காஷ்மீர் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை குறிப்பிட்டு மறைமுகமாக இந்த மாநாட்டில் ராஜ்நாத்சிங் பேசியுள்ளார் எனவும், சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் ராஜ்நாத் சிங்குடன் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.