இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்’ படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று உள்ளதால் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்திய சினிமாவில் சர்ச்சை இயக்குனர்களில் தவறாமல் ஒரு இடத்தை பெற்றிருப்பவர். இவர் ஆர்ஜிவி வேல்ட் தியேட்டர் என்ற பெயரில் உள்ள தனது சொந்த டிஜிட்டல் தளத்தில் அடல்ட்ஸ் ஒன்லி படங்களை வாரத்திற்கு ஒருமுறை வெளியிட்டு இளைஞர்களை குதூகலித்து வருகிறார்.
இந்நிலையில் டேஞ்சரஸ் என்று ஒரு படத்தை ஓரின சேர்க்கையாளர் கதையை மையமாக வைத்து டைரக்டு செய்துள்ளார். இப்படத்தில் அப்சரா ராணி, நைனா கங்குலி நடித்து இருக்கிறார்கள். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் இப்படம் தமிழில் ‘காதல் காதல்தான்’ என்ற பெயரில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியதாவது “சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் தான் படத்தை எடுத்திருக்கிறேன். மேலும் தணிக்கை குழுவும் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன் பிறகும் சில தியேட்டர் நிறுவனங்கள் படத்தை வெளியிட மறுப்பது ஓரின சேர்க்கையாளர் அமைப்புக்கு எதிரானது. அது மனித உரிமை மீறல்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.