Categories
அரசியல்

‘விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறாங்க’…. துயர் துடைக்குமா தமிழக அரசு….? ராமதாஸ் கேள்வி….!!!!

கரும்பு கொள்முதலால் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக  தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஒரு கரும்பும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்காக, கடலூர் விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ஒரு கரும்பு 33 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

எனினும், பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்க தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தற்போது வரை விவசாயிகளிடம் நேரடியாக ஒரு கரும்பு கூட வாங்கப்படவில்லை. எனவே, விவசாயிகள், கரும்புகள் வாடிப்போவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், தமிழகத்திலேயே, அதிகமாக கடலூரில் தான் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 5000 சரக்குந்துகளில், ஏற்ற கூடிய அளவிற்கு கரும்பு விளைந்திருக்கிறது. எனினும், தற்போது வரை சுமார் 100 சரக்குந்து அளவிற்குதான் கரும்புகள் இடைத்தரகர்களின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

மீதமிருக்கும் கரும்புகள் தோட்டங்கள் மற்றும் சாலைகளில் வாடிக்கிடக்கிறது. மேலும், இன்னொரு புறம், கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட 33 ரூபாய் விலையை கொடுக்காமல், இடைத்தரகர்கள் மூலமாக ஒரு கரும்புக்கு 18 ரூபாய் தான் கொடுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு ஒரு கரும்பிற்கு 3 முதல் 4 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இது தான் விவசாயிகளை கண்ணீர் விடச்செய்கிறது. பிற மாவட்டங்களிலும் இந்த நிலை தான். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வைத்திருக்கும் கரும்புகளை தமிழக அரசு உடனடியாக அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளின் துன்பம் நீங்கி  அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்குவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Categories

Tech |