பிரபல இசைக் கச்சேரி குழு மற்றும் இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையமான லஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர்கள் முருகவேல், ராமன் மற்றும் லட்சுமணன். இதில் இரண்டாவது சகோதரரான ராமன், சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார்.
பைல்ஸ், நெஞ்சு வலி ஆகிய உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த ராமனுக்கு கடந்த ஒரு வார காலமாக பைல்ஸ் தொல்லை அதிகரித்திருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்து கொண்டிருந்த லக்ஷ்மன் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தவர் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த மனைவி மற்றும் அவரது தாயார் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ராமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், உடலில் ஏற்பட்ட நோயினால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது, பணப் பிரச்னை காரணமா? உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.