தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே இன்று காலை தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஏராளமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.