பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வீசாவில் விமானம் மூலம் வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வட மாநிலங்களில் தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகம் வந்த அவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ராமேஸ்வரம் நுழைவு பகுதியில் சுகாதார துறை அதிகாரிகளால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஃபாலரிஸ் பேட்டரிஸ் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் விடுதியில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இராமேஸ்வரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் குடும்பத்துடன் சென்று வந்ததால் மக்களிடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.