தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 613 இடங்களில் கொரோனா தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 613 மண்டலங்களில் உள்ள 38.24 லட்சம் வீடுகளில் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் தொற்று பரவாது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஆந்திர அரசு விரைவு பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ததற்கு அம்மாநில எதிர்கட்சித் தலைவர் பாராட்டியுள்ளார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்து வருகிறார். உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மலிவான அரசியலை ஸ்டாலின் கைவிட வேண்டும். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. எதிர்க்கட்சித்தலைவர் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.