கொரோனா துரித பரிசோதனை கருவிகள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் ரேபிட் கருவிகள் சரியான முறையில் பரிசோதனை முடிவுகளை காட்டவில்லை, தவறாக காட்டுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ராஜஸ்தான் மாநிலம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தன. இந்நிலையில்தான் இந்திய மருத்துவ கவுன்சில் ரேபிட் டெஸ்ட் கிட்களை எந்த மாநிலமும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இந்திய அரசின் புகாருக்கு சீனத் தயாரிப்பு நிறுவனமும் பதிலளித்துள்ள நிலையில் ரேப்பிட் டெஸ்ட் கிட் கருவிகளை இந்தியாவிலே தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்த பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணிகள் தொடங்கும். ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மே 31ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.