அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஆயிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜூஹா ஜைனப் என்ற ஒரு வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இந்த பெண் குழந்தை அரியவகை முதுகு எலும்பு தசை நார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 18 கோடி மதிப்பிலான ஊசி இந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு தேவைப்பட்டுள்ளது. எனவே இந்த குழந்தையின் பெற்றோர் மாநில மத்திய அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் தங்களது குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான நிதி வழங்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த டர்பைன் மருந்து விற்பனை மையத்தில் குலுக்கல் நடைபெற்றுள்ளது. அந்த குலுக்கல் முறையில் ஜூஹாக்கு இலவசமாக அந்த ஊசி கிடைத்ததால் குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பின் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி டெல்லியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வைத்து அந்த குழந்தைக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் தங்களுக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.