கனடாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து, காகங்களை பற்றிய அரிய உண்மை தெரியவந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற புகைப்படக் கலைஞர், விக்டோரியாவில் அமைந்துள்ள இயற்கை சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் அருகில் நிறைய காகங்கள் வந்து அமர்ந்திருக்கிறது. அதில் ஒரு காகம் சோகமாக இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அதன்பின்பு, ஆஸ்டின் தன் வீட்டிற்கு வந்து, தான் எடுத்த புகைப்படங்களை பெரியதாக்கி பார்த்துள்ளார். அப்போது உடல்நலமில்லாமல் இருந்ததாக அவர் நினைத்த காகத்தின் உடல் முழுக்க எறும்புகள் ஊர்ந்து சென்றுள்ளது. இதை கவனித்த அவர் உடனடியாக அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்.
அப்போது அரிதான உண்மை ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது காகம் வேண்டுமென்றே எறும்பு புற்றின் மீது உட்காருமாம். இதனை Anting என்று கூறுவார்கள். அதாவது சில நேரங்களில் எறும்பு புற்றின் மீது காகங்கள் இப்படி அமர்ந்து, எறும்புகளை தங்கள் மீது ஊர்ந்து செல்ல வைக்குமாம்.
இல்லையெனில் தானாகவே தங்கள் அலகால் எறும்புகளை எடுத்து தங்கள் மேல் விடுமாம். அப்போது பயத்தில் எறும்பின் ஆசனவாயின் அருகில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து பார்மிக் அமில திரவம் சுரக்கும். அது காகங்களின் உடலினுள் உறியப்பட்டு, இயற்கையான பூச்சிக்கொல்லியாக மாறுகிறது.
அதாவது காகங்கள், தங்கள் உடலில் இருக்கும் பூச்சிகளை கொல்ல இவ்வாறு செய்கிறது. மேலும் பழைய இறகுகள் உதிர்ந்து புதிதாக இறகுகள் தோன்றும் போது, அவற்றின் உடலில் அரிப்பு ஏற்படுவதால், அதனை நீக்குவதற்காகவும், இறகுகளினுள் இருக்கும் ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தவும், காகங்கள் இவ்வாறு செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.