உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி விற்பனை கடைகளில் ரசாயனம் தடவி வைக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஆடு, மாடு, கோழி, நண்டு போன்ற இறைச்சிகள் விற்பனை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து இறைச்சி கடைகளில் திடீரென மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான குழு, காவல்துறையினர், நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் கீழ ஊரணி, சந்தைப்பேட்டை, பர்மா காலனி, வாட்டர் டேங்க், நகராட்சி மீன் அங்காடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சில வியாபாரிகள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக அதன்மீது ரசாயனத்தை தடவி விற்பனை செய்வார்கள். இந்த ரசாயனம் தடவிய மீன் உடல்நலத்திற்கு மிகவும் கெடுதலானது. இதனால் டாக்டர் பிரபாவதி ரசாயனம் தடவிய 100 கிலோ மீனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி அதிகாரிகள் அந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.