ரஷ்யாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்யாவில், அதன் ராணுவ அமைச்சகம், கமலேஷ் தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு ஊசியை உருவாக்கியுள்ளது. அதன் பின்னர் உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசியை நாங்கள் கண்டு பிடித்து, பதிவு செய்துள்ளோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கடந்த 11ஆம் தேதி அன்று கூறியிருந்தார். அந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தடுப்பூசி குறித்து கமலா நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறுகையில், ” தடுப்பூசியை ரஷ்ய மக்களுக்கு போடுவது சற்று தாமதமாகும்.
உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியின் முக்கிய பகுதி, பதிவுக்குப் பிந்தைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர் தடுப்பூசி விற்பனைக்கு கிடைக்கும். அதற்கு இரண்டு-மூன்று அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம். எனவே ஒரு மாதத்தில் தடுப்பு ஊசி திரளான மக்களின் பயன்பாட்டிற்கு வந்து சேரும்” என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் பதிவுக்கு பின்னர் செய்யப்படும் ஆய்வுகள் நடந்து முடிவதற்கு ஆறு மாதங்கள் வரை கூட ஆகலாம் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.