Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களை அதிகம் தாக்குகிறதா…!!!! எதனால் வருகிறது..? ரத்த சோகை நோய்…..

‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை  என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம்.

வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று தரப்புக்கும் சிறிது வித்தியாசப்படும். ஆண்களுக்கு சராசரியாக 14.5 முதல் 15.5gm/dl, பெண்களுக்கு 13.5 முதல் 14.5 gm/dl இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு 16 முதல் 17 gm/dl என கொஞ்சம் அதிகமாக இருக்கும். (ஒரு லிட்டர் ரத்தத்தில் 10ல் ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டு, அதற்குள் எத்தனை கிராம் ஹீமோகுளோபின்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவார்கள்.

அதனால்தான் 10ல் ஒன்று என்ற அர்த்தத்தில் Grams per deci litre என்று கணக்கிடுகிறார்கள்.) இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவதை வைத்து ரத்தசோகை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஹீமோகுளோபின் 10 முதல் 11 கிராம் இருந்தால் அது லேசான ரத்தசோகை, 9 முதல் 10 கிராமாக இருந்தால் அது மிதமான ரத்தசோகை, 8 கிராமுக்குக் கீழ் இருந்தால் அது தீவிர ரத்தசோகை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விபத்து, அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்றவற்றால் உண்டாகும் ரத்த இழப்புகள், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், பி12 போன்ற சத்துகள் கிடைக்காமல் போவது, பரம்பரை குறைபாடு, என்சைம்களில் ஏற்படும் கோளாறு, சிவப்பு அணுவின் அளவு குறைவது அல்லது வடிவம் மாறுவது, மலேரியா காய்ச்சல், ரத்தம் தானம் பெறும்போது ரத்த வகை மாறிப்போவது போன்ற காரணங்களால் ரத்த சோகை உருவாகலாம்.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் ரத்தசோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். அதனால், பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது.

சோர்வு, தூக்கம் வருவது போன்ற உணர்வு, பசியின்மை, எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபட முடியாதது, மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, விரல் நகம் மேடாக இல்லாமல் தட்டையாக காட்சியளிப்பது போன்ற அறிகுறிகள் ரத்தசோகை இருப்பவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும். ரத்தசோகையின் இந்த அறிகுறிகள் தெரிந்தால் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். காலையில்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதோ, சாப்பிடுவதற்கு முன்புதான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதோ கிடையாது.

எப்படி தவிர்ப்பது?

எல்லாவற்றுக்கும் மேலாக சரிவிகித உணவு சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தசோகை வருவது இல்லை. கீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, பேரீச்சம்பழம் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஜீரண சக்தி குறையும்போது மாத்திரை, ஊசி வழியாகவும் அந்த குறைபாட்டை சமன்படுத்த முடியும்.’’

Categories

Tech |