சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 270 மூட்டைகளில் 13 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி பகுதியில் வசிக்கும் சுரேஷ் மற்றும் சஜீத் என்பதும், அவர்கள் ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு ரேஷன் அரிசியையும் லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் இந்த கடத்தல் தொடர்பாக திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.