ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன், துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாண்டவர்மங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு சோதனை நடத்தியதில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு சுமார் 21 மூட்டைகளில் இருந்து 1050 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அரிசியை பதுக்கி வைத்திருந்த பூல்சாமி மற்றும் அவரது மகன் பாண்டிதுரை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.