ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளரை வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிளியனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் சட்ட விரோதமாக 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 300 கிலோ கோதுமை மூட்டைகள் ஆகியவற்றை கடத்த முயன்றனர். அப்போது அந்த லாரியை மடக்கி பிடித்த விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர் லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக எடச்சேரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் ராமலிங்கம்பேட்டை பகுதியில் வசிக்கும் ஏழுமலை, வீரமணி மற்றும் லாரி டிரைவரான சீனிவாசன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிரபு ரேஷன் கடை விற்பனையாளர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.