லாரியில் 16 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கலெக்டர் சன்முகசுந்தரத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பறக்கும் படை தாசில்தார் கோடிஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு லாரி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அதனை மடக்கி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அவர் சந்தேகம் அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.
இதனால் லாரியை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதில் சுமார் 16 டன் ரேஷன் அரிசி இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் 16 டன் ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்