முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ரூ.1,000 நிவாரணம் இந்த தேதிகளில் வழங்கப்படும் என்பதால், 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்காதவர்கள் ஜூன் 27க்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளில் உள்ள அரிசி ரேஷன்கார்டு தாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும். காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மத்திய 2 மணி வரை மட்டுமே செய்லபடும். சென்னை பெருநகர காவல் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள் இயங்காது எனவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.