முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் ரவிச்சந்திரன். இவரின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார்.
28 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் வெளியில் வந்துள்ளார். சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்பேரில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை ஏழு பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றியது.
அதில், உத்தரவு வரும்வரை எனது மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், “மனுதாரர் முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால் 30 நாள்களுக்கு குறைவாக பரோல் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒருமாத கால பரோல் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர், ரவிச்சந்திரன் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் வசித்துவருகிறார். உள்ளாட்சித் தேர்தல், திருவிழாக்கள் நடைபெறுவதால் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது” எனக்கூறி நிராகரித்தார்.
ஆனால் இதே வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒருமாத சாதாரண விடுப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு, ரவிச்சந்திரனுக்கு ஒருமாத சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்ததாக பொங்கல் விழா உள்ளது. ஆகவே ரவிச்சந்திரனுக்கு போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்க இயலாது . எனவே, ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை நீதிமன்றத்தை அணுகியே சாதாரண விடுப்பில் சென்றுள்ளார். ஒருமுறை தந்தையின் இறுதிச் சடங்கிற்காக சென்றுள்ளார். விடுமுறைக்குச் சென்ற நாள்களில் சிறைக்குத் திரும்பும்வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் முடிவடைந்துள்ளது. ஆகவே, ஜனவரி 10ஆம் தேதிமுதல் ஜனவரி 25ஆம் தேதிவரை ரவிச்சந்திரனுக்கு 15 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.