பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டதில் கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை என பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செல்லத்துரைக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் செல்லத்துரை தனது காரில் தனியாக சென்றுள்ளார். அப்போது எதிரே இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் காரை வழிமறித்து செல்லத்துரையை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார் .
இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய காதர் உசேன்(26), பிரபு(29) , சாரதி (24),சுரேஷ்(34), மணிகண்டன்(23), யுவராஜ்(33) , பாலமுருகன்(33), சின்னவர்(13), தீனதயாளன்(26) ஆகிய ஒன்பது பேரும் இன்று மதியம் நாமக்கல் இரண்டாம்நிலை நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தனர். இதனையடுத்து நீதிபதி 15 நாட்கள் ஒன்பது பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.