ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அந்த வாலிபர் மீன்துள்ளி கிராமத்தில் வசிக்கும் சூரியா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சூரியா கோவில்பட்டியில் உள்ள நண்பரை பார்க்க வந்துள்ளார். இதனையடுத்து தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சூரியா எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.