கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை ஒருநாள் போட்டிகள் போல் பகல் – இரவு போட்டிகளாக நடத்த முடிவு செய்து சில போட்டிகளை நடத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே பகல்- இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா அணி இதுவரை பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனவே, கேப்டன் கோலிக்கு பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குல் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று தேர்வுக்குழு உறுப்பினர்கள், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோருடன் கங்குலி ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், ”இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சில ஆலோசனைகளை நடத்தினோம். குறிப்பாக பகல் – இரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவது குறித்து பேசினோம். இதற்கு கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்ததுடன் பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் என கூறியுள்ளார்.
இந்த காலத்தில் கிரிக்கெட் பார்க்க மக்களிடையே ஆர்வம் இருந்தும் போதிய நேரம் இல்லாமல் இருக்கிறது. இதனை சரிகட்டுவதற்காகவே பகல் – இரவு நேரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடத்த ஆலோசனைகள் நடத்தியுள்ளோம்.தொடக்க காலத்தில் டி20 போட்டிகள் நடத்த வேண்டும் என பேசுகையில், பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் டி20 போட்டிகளின் வளர்ச்சி தற்போது அனைவருக்கும் தெரியும். அதுபோல் டெஸ்ட் போட்டிகள் பகல் – இரவு நேரங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.