பாஜகவுடன் கூட்டணி பேசுவதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் அதே போல நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு அதற்கான 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் தீடிர் திருப்பங்கள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக 3_ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்தது தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்த அரசியல் கட்சிகளையும் , மாநில முதல்வர்களையும் சந்தித்து வந்தார். இதனால் இவர் பிஜேபி_க்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என்றும் பேசப்பட்டது. இதில் முக.ஸ்டாலினுடனான சந்திப்பு எப்படி அமையும் அது 3_ஆவது அணியா அல்லது பிஜேபி ஆதரவு நிலைப்பாட என்று புயலை கிளப்பியது.
இந்த சந்திப்பு குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் இது மரியாதையை நிமித்தமானது என்றும் , முக.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் சந்திரசேகராவ் 3_ஆவது அணி அமைக்கவில்லை என்று பேட்டியளித்தார். ஆனால் இந்த சந்திப்பு குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக பாஜகவிடம் அமைச்சர் சீட் கேட்கின்றது என்றும் , பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக வெற்றி பெறுமென்று முக.ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் பேசி வருகின்றார் என்று தெரிவித்தார்.
தமிழிசையின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் திமுக பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் தமிழிசை அரசியலை விட்டு வெளியேறுவாரா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.