Categories
மாநில செய்திகள்

மக்களுக்காக எதை வேண்டுமானால் தியாகம் செய்ய தயார் – நாரயணசாமி..!!

 மக்களுக்காக எதை வேண்டுமானால் இழக்கவும், தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் மாநிலத் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், இஸ்லாமியர்கள் என ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியாணது ஏஎப்டி மைதானத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு முடிவடைந்தது. தொடர்ந்து, அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து மதத்திற்கும் சமமான நாடு இந்தியா. இங்கு இனக்கலவரம், மதக்கலவரத்தை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 14 மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்கின்றனர். அதேபோல் புதுச்சேரியில் எக்காரணம் கொண்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்ற விட மாட்டோம் என்றார்.

 தொடர்ந்து பேசுகையில், புதுச்சேரி மாநிலம் ஒரு அமைதி பூங்கா. அனைவருக்கும் ஒரே சட்டம் என பொது சிவில் சட்டம் கொண்டு வந்து ரத்தகலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்றார். மேலும், மக்களுக்காக எதை வேண்டுமானால் இழக்கவும், தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன் என நாரயணசாமி தெரிவித்தார்.

Categories

Tech |