அரியாங்குப்பத்தில் பெற்ற தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் அரியான்குப்பம் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி விஷ்ணுவுக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு தாயை கத்தியை எடுத்து வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தாய் வசந்தாவை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் மயங்கிக் கீழே விழுந்தார். மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுவை தேடிவந்தனர். அவர் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி குணமடைந்த பிறகு அவரை கைது செய்ய போவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.