தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும்.
பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. இதனால் தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் நிலவவும் கொரோனோவின் தாக்கத்தை பொறுத்து தளர்வுகள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம் இருப்பதால் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது. சென்னையில் சமூக பரவல் என கூறியுள்ளனர். கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும். தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும் . இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் . தங்கள் குடும்பங்களில் இருக்கும் வயதானவர்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதிலும், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய் இருப்பவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என மருத்துவ குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.