தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நேர்காணல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார். அவருக்கு தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக நான் உதயநிதியை சந்தித்து பேச போகிறேன் என்று தில் ராஜு கூறியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே துணிவு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், தற்போது வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு போன்ற பகுதிகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாரிசு படத்தை வெளியிடுகிறது. மேலும் இந்த தகவலை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தங்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட உறுதி செய்துள்ளது.