ஆசிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான கச்சா எண்ணெய் விலையை, சவுதியின் அரம்கோ நிறுவனம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக, அந்நாட்டு அரசு வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பெட்ரோலிய பயன்பாடு குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் சரிந்து வருகிறது. இது, சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதியின் அரம்கோ, மாதம் தோறும், ஐந்தாம் தேதியளவில் விலையை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடும். இதை தொடர்ந்தே, ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் ஈராக், குவைத், ஈரான் நாடுகளின் கச்சா எண்ணெய் விலை நிர்ணயமும் இருக்கும். இந்நிலையில், சீனா மற்றும் சர்வதேச நாடுகளின் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு, எண்ணெய் விலையை குறைத்து சவுதி அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.