சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 118ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது.
நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 635ஆக இருந்த நிலையில் 517 தெருக்களில் கடந்த 14 நாட்களாக நோய் தொற்று கண்டறிப்படாததால் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 98 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் 101 தெருக்கள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆக குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,461 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.