புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகாம் தொடங்கும் தேதியை இன்னும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை பின்பற்றி முகாமிற்கு யானைகளை அழைத்து வருமாறு அந்தந்த கோவில் செயல் அலுவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு முகாமுக்கு அழைத்து வருவதற்கு முன்பே யானை தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவரின் எதிர்மறையான சான்றுகளோடு முகாமுக்குள் அனுமதிக்கப்படும் என்றும், முகாமுக்குள் வரும் அனைத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கு கொள்வதற்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.
இதனை தொடர்ந்து யானைகளுடன் முகாமிற்கு வரும் மருத்துவர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்ற அனைவருமே சீரான இடைவெளியில் முக கவசம் அணிந்து வந்து, கட்டாயம் கிருமி நாசினியை உபயோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் நோயுற்ற, வருடாந்திர பருவக் கோளாறு உள்ள, நோய் வர வாய்ப்புள்ள, தொற்று பாதிப்பு மற்றும் முகாமுக்கு வர மறுக்கும் யானைகளை முகாமுக்கு அழைத்து வரவேண்டாம் என்றும், யானைகளை லாரிகளில் ஏற்றுவதற்கு முன்பாக லாரியை கட்டாயம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற புத்துணர்வு முகாமில் தமிழ்நாட்டிலுள்ள திருக்கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து வந்த இரண்டு யானைகள் என மொத்தம் 28 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு 1 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரம் நிதியை இந்த முகாமிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.