தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் என்பவருக்கு இம்முறை தேர்தலில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்காததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஹசீப் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அருகில் வந்துள்ளார்.
அதன் பிறகு அங்கிருந்த உயர் மின் கோபுரம் மீது ஏறியுள்ளார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த உள்ளூர் வாசிகள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் ஹசீமை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.