சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் விழாவிற்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார். மற்ற மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்கள் கொடி ஏற்ற உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றனர் . தலைநகர் டெல்லியில் விமானநிலையம் போன்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டம்-ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.